Wednesday, 8 April 2020

பெண்ணியம்

பெண்ணியம்!

படிப்பறிவு பட்டறிவு
தைரியம் தன்னம்பிக்கை
வீரம் வெற்றி திறமை.
என ஆண்டாண்டு
ஆயிரமாயிரம் ஆண்டு
அளவுகோல் கொண்டே
வகைசெய்து
போற்றுவதும் 
தூற்றுவதும்
ஆணினம் செய்யும்..!
சில பெண்ணினமும்
பெண்ணியம் பேசும்..
பெண்ணியமும் 
பெண்ணுரிமையும்
தீர்க்கமாய் சொல்ல..
தனிப்பெண்ணோ 
தலைபெண்ணோ 
அவள் அவளால்
அவளாய் செய்யும்
ஏதொரு காரியமும்!
வெளியொரு விசையின்
வினையின்றி
அவளாய் அவளே 
நிகழ்த்தும் காரியமும்!
பெண்ணியமாய் அறிதல் நன்று!
வரையறுக்கவோ
உரிமை மறுக்கவோ
கொடுக்கவோ
அவளே அன்றி..
ஆணோ பெண்ணோ
யாவரும் இலர்.. 

பெண்விடுதலை என்பார்
பெண்காவலன் என்பார்
புரட்சி என்பார்
சுயமாய் இருத்தலும்
தன் சுற்றத்திலும்
சுயமாய் இருப்போரும் 
பெண்ணியமாய் அறிதல் நன்று!!


Tuesday, 7 April 2020

பதினெட்டாயிரம்

அஞ்சு மணி பஸ்க்காக
நாளெல்லம் காத்திருப்பு..

பட்டயம் படிக்க
போன மகன்..
தினம் 
பசியோட வீடு திரும்ப..
மத்தியானம் ஆக்கிவச்ச
சுடுசோறும் புளித்தண்ணியும்
அறைச்சுவச்ச துவையலும்
எடுத்துவச்சு
வாசலிலே காத்திருப்பு..
அஞ்சு மணி பஸ்க்காக..

சித்திரை மாச
மழை கணக்கா..
வந்த 
ரெண்டுமணி பஸ்ல..
காரணம் ஏதும் சொல்லாம
தண்ணிபட்ட வேட்ட போல 
முடங்கியிருந்த என் மகராசா..

மூணாம் பருவ ஃபீஸ் கட்ட
பதினெட்டாயிரம் குறிச்சி வந்த.. 
கடைசி தேதி வந்துருச்சோ
முடங்கியிருந்த என மகராசா..

நோவா கண்ட  சக்ரவர்த்தி
வீட்ட தாங்கும் பெண்ணொருத்தி..
தங்க நகை வெள்ளி நகை
வித்து வித்து
வாழ்க்கை நடத்தி..
பெத்த மகன படிக்க வைக்க
பொன்னும் இல்ல பொருளும் இல்ல..

கல்யாணம் கட்டிவந்த காலத்துல..
சீருசெஞ்ச வெங்கல பானை..
பொங்கல் வச்சதில்ல ஒருநாளும்!
பன்டுபாத்திரம் அத்தனைக்கும் 
இனிமே வேலை இல்ல வீட்டில 
பிள்ளை படிக்க தான்
அத்தனையும்..
மிச்சமிருந்த
கம்மலும்
சேர்த்து  கொண்டுபோன
அடகுவைக்க....

மொத்தமா வைக்குறியே
சொந்தமா களவா?...
உரசிப்பார்த்த கடக்காரன் 
கேட்ட கேள்வி 
தாங்கி நின்ன..
தள்ளி நின்ன நானோ
துடிச்சுபோனேன்
ஒடிஞ்சுபோனேன்..

நல்லா வாழ்ந்த
வாழ்க்கையிலும்..
நல்லா இல்லா
வாழ்க்கையிலும்..
தெய்வமில்ல வேற..
என்சாமி நீதானே
தேவையில்ல வேற...!









Monday, 6 April 2020

தூரம்

வெளிஉலகம் காண 
கரு காத்திருக்கு..
பத்து மாதமும்
கருவிருட்டில்
காத்திருக்கு..
பகலிரவு
காணாத காத்திருக்கு..
தூரம் என்னவோ
குறைவுதான்.. 
ரெண்டு அங்குல
தடிமன் தான்..
வயித்துக்குள்ளயும்
வெளியவும்..
தூரம் என்னவோ 
குறைவுதான்..
இருக்கும்
தூரம் கொஞ்சம்நாள்
இருந்தும்
தூரம் நல்லதுதான்..

Friday, 3 April 2020

மேகி

வாரம் முழுக்க ஸ்கூல்தான்
அம்மாவுக்கும் வேலைதான்..
ஊருசனம் அத்தனைக்கும்
ஒரேஒரு வழக்கம்தான்..

சாயங்காலம் வந்ததும்
தெருவிளக்கு வெளிச்சத்துல
குச்சிநிரம்ப காடிபெட்டி
மேல அடுக்கிவச்ச சக்கையும் 
தண்டவாள ரயில்போல 
குச்சிவைக்கும் சக்கையும்
கோர்க்க கோர்க்க கோபுரமா.. 
எங்க சனம் அத்தனைக்கும்
தெனந்தோறும் வழக்கமா..!
வாரக்கடைசிய பார்த்துதான்.

வந்த..
சனிக்கிழமை சம்பளம்போட
அஞ்சுரூபா மேகியில
மொத்தகுடும்பம் ருசிபாக்கும், 
எங்கம்மா சாமி
என்ன பாத்தே பசியாறும்!