Monday, 25 May 2020

மெய்

உடனில்லா நாளும்
மெய்யில்லா பொழுதும்
இதுவும் 
நில்லாமல் நீள.. 
நீயில்லா நானோ
வாடாமல் வாட..
காணும் யாவும்
வண்ணப்பிழையாய்..
கைஎட்டும் தூரம்
இருந்தும் 
கைகள் நீளவில்லை..
உனை தீண்ட கரங்கள் 
துடித்திடவே..
ஏனோ தடுக்கும்
ஏதோ குழப்பம்..
விடையொன்று தேட 
உலாவும் மனது
வினாவின்றி விடையேது?!
மொழிபேசா கிள்ளை 
சத்தமிடும் பொருளோ
பசியோ வலியோ 
பயமோ???..
பொருளறியா 
பொருளுணறா 
தவிக்கும் தாயின்
நிலையோ என்னிலை..
பக்குவம் என்றே 
இறுகிப்போய்..
இறுக்கம் கொண்டே
இழப்பது வழக்கம்..
இருப்பதும்
தன்னை 
வெறுப்பது வழக்கம்..
நிகழ்விலும்
வெளிக்கொணரா
விருப்பமும்
ஏக்கம் கொண்டே
நீர்த்துப்போகும்.
பழகிப்போன மனமும்
சிறுநகையாய் 
சுகமாய் உணரும்.

நீயும்
உடனில்லா நாளும் 
நானோ 
உயிரில்லா மெய்யும்..

Saturday, 9 May 2020

உப்பு தண்ணி

வருசத்துல கொஞ்சநாள்
மழைக்காலம் வந்துபோகும்..
பஞ்சம் போக்க பெஞ்சதில்ல
பட்டினியும் போட்டதில்ல..

மத்த நேரம் வாழ்க்கையும்
இப்படிதான் போகுது!

அந்தியில முழிச்சு,
பைபாஸ் பக்கம் குழாயடி..
அப்பா முந்திக்கொண்டு போக
வரிசை வச்ச குடமெல்லாம்
வானவில்லா அணிவகுக்கும்..
பெடல் எட்டாத சைக்கிளும் 
சணல் கயிறு அந்துடாம
பின்சாக்கு பாவம் பாக்கும்..
தூக்குத்தண்டனை கைதிபோல 
தொங்க விட்ட ரெண்டுகுடம்
மேடு பள்ளம் தாண்டி
 சிந்தாம வீடு சேர..
அக்காவும் அம்மாவும்
தொட்டி அண்டா
கழுவி வச்சு காத்திருக்க..
மத்தகுடத்த அப்பாவும்
குடுக்க குடுக்க 
அடிச்சு வைக்க..
இப்படியா ஏழு நடை
நிரப்பிவச்சா போதும் 
தீப்பெட்டி ஆபிஸ் ரேடியோல
எட்டு மணி சேதி !!!